மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட அவனியாபுரம் செம்பூரணி பகுதியில் வசித்து வந்தவர் மூக்கையா (55). இவர் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வசிந்துவந்துள்ளார். அடிக்கடி நாதஸ்வர நிகழ்ச்சிக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்த இவர் கடந்த மூன்று நாள்களாக காணவில்லை எனக் கூறப்பட்டது.
வழக்கம் போல நாதஸ்வர நிகழ்ச்சிக்கு வெளியூர் சென்றிருப்பார் என எண்ணியிருந்த நிலையில் இவர் தங்கியிருந்த மண் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்த போது சுவர் இடிந்து விழுந்து, இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த நிலையில் மூக்கையா பிணமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இச்சம்பவம் குறித்து அவனியாபுரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சுப்பையாவின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரது மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில நாள்களுக்கு முன்பு திருப்பரங்குன்றத்தில் பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்து மூக்கையா இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.