மதுரை: மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த வசந்தி, நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இவர், கடந்த மாதம் கூலி வேலை செய்யும் தொழிலாளி ஒருவரிடம் ரூ. 10 லட்சம் பணத்தை வழி மறித்து பறித்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து வசந்தி உட்பட ஐந்து காவலர்கள் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாகவுள்ள ஆய்வாளர் வசந்தி, முன்பிணை கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்துள்ளார்.
அதில், "கள்ள நோட்டு மாற்றி கடத்துவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தேன். என் மீது குற்றச்சாட்டு வைத்தவர் வைத்திருந்த 2 பைகளை பரிசோதித்துப் பார்த்தேன். அதில், பணம் எதுவும் இல்லை. ஆனால், தவறான குற்றச்சாட்டின் பேரில் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என கூறியிருந்தார்.
நீதிபதி கருத்து
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, " வழக்கு பதியப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் காவல் ஆய்வாளரை இன்னமும் கைது செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினார். மேலும், இதுபோல தாமதம் ஆவது மனுதாரருக்கு சாதகமாக அமைந்து விடாதா? என கேள்வி எழுப்பினார். மேலும், இதுபோன்ற செயல்களால் காவல்துறையினர் மீதான நம்பிக்கை பொதுமக்களுக்கு குறைந்துவிடும் எனவும் குறிப்பிட்டார்.
அரசு தரப்பில், "ஆய்வாளர் வசந்தியின் செல்போன் அழைப்புகளை கண்காணித்ததன் மூலம் அவர் திருப்பதியில் இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக அவரது வீட்டில் சோதனை செய்யப்பட்டுள்ளது. அவரது, குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது" என தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நீதிபதி, அரசு பணியாளர்கள் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதை ஏற்க இயலாது என குறிப்பிட்டு, காவல் ஆய்வாளர் வசந்தி, அவரது ஓட்டுநரை விரைவாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து காவல் ஆய்வாளர் வசந்திக்கு எதிரான ஆவணங்களை முறையாக திரட்டி தாக்கல் செய்ய காவல் துறையினருக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: கோயில் நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற தடை!