மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் ஆனி மாத திருவிழா நடைபெற்றது. இதில், பக்தர்கள் விரதமிருந்து அக்னி சட்டி, பால்குடம், முளைப்பாரி போன்றவற்றை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்று வலம் வந்தனர்.
ஊர் மக்கள் இந்த திருவிழா குறித்து கூறுகையில், இந்த நவீன காலத்தில் பழமை மாறாத சின்னங்களான உரல், ஆட்டு உரல், அம்மிக்கல், உலக்கை போன்ற தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக இந்த பொருட்களை திருவிழாவின் போது சோற்றுக் கற்றாழையின் மீது கட்டி கம்பால் கயிற்றுடன் கட்டப்பட்டு தொங்கும் இதனை 3 நாட்கள் வழிபடுகின்றனர்.
இதனை காண அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் தொடர்ந்து கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளதாக பொதுமக்கள் கூறினர். சோற்றுக் கற்றாழையின் பிடியில் அம்மிக்கல், ஆட்டு உரல் , உலக்கை போன்ற பொருட்கள் தொங்குவது பெரிய அதிசயம் என்று அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.