மதுரை : நூலகம் அமைப்பது தொடர்பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்ட இடம் கர்னல் ஜான் பென்னிகுயிக் வாழ்ந்த இடம். எனவே அந்த கட்டடத்தை இடிக்கவோ, மாற்றவோ கூடாது என்று அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இதே கருத்தை அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் செல்லூர் ராஜு பேசினார்.
இங்கிலாந்து திரும்பிய பென்னிகுயிக்
இப்பொழுது வரை செல்லூர் ராஜுவோ அவரது கட்சியோ எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் அவர்களால் எந்த ஆதாரத்தையும் வெளியிட முடியாது.
ஏனென்றால் அதில் துளியும் உண்மையில்லை. பென்னிகுயிக்கின் வாழ்வையும், முல்லைப் பெரியாறு அணை உருவான விதத்தையும் பற்றி விரிவான ஆய்வினை மேற்கொண்டு, அதனை நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களில் எழுதியுள்ள எழுத்தாளன் என்ற முறையில் இரண்டு கருத்துகளைப் பதிவு செய்கிறேன்.
1. கர்னல் பென்னிகுயிக் மதுரையில் வாழ்ந்தார் என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இதுவரை எந்த ஒரு ஆய்வாளராலும் பதிவு செய்யப்படவில்லை. அப்படிப் பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த நூலையோ, ஆவணத்தையோ அதிமுக வெளியிட வேண்டும்.
2. 1895ஆம் ஆண்டு அணைக் கட்டும் பணி முடிவுற்ற அடுத்த ஆண்டே பென்னிகுயிக் பணி ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்புகிறார். மனைவி, ஐந்து பெண் குழந்தைகளுடன் இங்கிலாந்து திரும்பும் அவருக்குச் சென்னை கிரிக்கெட் கிளப்பின் சார்பில் பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டு வழியனுப்பப்படுகிறது. ஏனென்றால் பென்னிகுயிக் சென்னை கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர்.
பென்னிகுயிக் வாழ்க்கை வரலாறு
1896ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் வசிக்கத் தொடங்கிய பென்னிகுயிக் ராயல் இந்தியன் பொறியியல் கல்லூரியின் தலைவராகிறார். மூன்றாண்டுகளுக்குப் பின் அந்தப் பதவியை ராஜினாமா செய்கிறார். பின்னர் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நதியின் வெள்ளப்பெருக்கைக் கையாள்வதற்கான ஆலோசனை பெறுவதற்காக அழைக்கப்படுகிறார்.
ஆஸ்திரேலியா சென்று மீண்டும் இங்கிலாந்து திரும்பும் அவர் 1911ஆம் ஆண்டு கேம்பெர்லி நகரில் மரணமடைகிறார். இதுவே அவரது வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள். அவர் இந்தியாவை விட்டு வெளியேறி 17 ஆண்டுகளுக்குப் பின் அதாவது 1913ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில் அவர் வசித்தார் என்று சொல்லுவது ஏதாவது பொருத்தப்பாடு உடையதா? கற்பனைக்கும் எட்டாத பொய் அல்லவா?
இடர்மிகு சூழலில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்து லட்சக்கணக்கான உழவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய மாமனிதனாகப் போற்றப்படும் பென்னிகுயிக்கின் புகழைக் குறுகிய அரசியல் நோக்கத்துக்குப் பயன்படுத்துவது என்ன நியாயம்?
துரோகம் செய்த அதிமுக
மதுரைக்கும், தென் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் மிகப்பெரும் பயன்பாட்டினை அளிக்கும் நூலகத்தைப் பொய்யைச்சொல்லித் தடுக்க நினைப்பது என்ன வகை அரசியல்? மூன்று ஆண்டுகளுக்கு முன் சட்டப்பேரவையில் அதிமுக அரசுக் கல்வி மானியக் கோரிக்கையின் போது மதுரையில் உள்ள உலக தமிழ்ச்சங்க கட்டடத்தில் ஆறு கோடி ரூபாய் செலவில் மாபெரும் நூலகம் அமைப்போம் என்று அறிவித்தது.
ஆனால் அந்த அறிவிப்பு காற்றோடு போயிற்று. எந்த நடவடிக்கையும் அதிமுக அரசு எடுக்கவில்லை. இன்றோ 70 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்த கையோடு அதனை நடைமுறைப்படுத்த துரிதமான ஆய்வினை பல முறை மேற்கொண்டு இடத்தை தேர்வு செய்துள்ளது தமிழ்நாடு அரசு.
அன்று நூலகத்தை அமைக்காமல் மதுரைக்குத் துரோகம் செய்த அதிமுக, இப்பொழுதோ அமையவிருக்கும் நூலகத்தைத் தடுக்க முயற்சிப்பதன் மூலம் மீண்டும் ஒரு துரோகத்தை மதுரைக்குச் செய்ய நினைக்கிறது. துரோகத்தை வீழ்த்தி நூலகத்தை அமைக்க மதுரை மக்கள் துணை நிற்பார்கள்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிஙக் : ரூ.1600 கோடி இழப்பு: பேக்கேஜிங் சிஸ்டம் ரத்து