மதுரை பாண்டிகோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி கொல்கத்தாவில் இருந்து விமானத்தில் புறப்பட்டு, இன்று இரவு 8.30 மணியளவில் மதுரை வருகிறார். விமான நிலையம் வந்தடையும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக பசுமலையில் உள்ள ஹோட்டல் தாஜ் கேட்வேயில் இரவு தங்குகிறார்.
அங்கிருந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணி அளவில் காரில் புறப்பட்டு, பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து கலந்துகொள்கிறார்.
பிறகு அம்மா திடல் அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இயங்குதளத்திலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் 1.35 மணியளவில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா சென்றடைகிறார்.
இதற்கிடையில், விமான நிலையம் வரும் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து நேரடியாக மீனாட்சி அம்மன் கோயில் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிரதமரின் பயணத் திட்டத்தில் இதுபோன்று எந்த நிகழ்வும் இடம்பெறவில்லை.
பிரதமரின் வருகையால் மதுரையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பால்கே விருது: பிரதமருக்கு நன்றி தெரிவித்த ரஜினி