மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் காணும் பொங்களை முன்னிட்டு இன்று (ஜன 17) ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தொடங்கி வைக்க விளையாட்டுத்துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், நேற்று (ஜன 16) விமானம் மூலம் மதுரை வந்தார்.
தொடர்ந்து அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், சற்று நேரத்தில் டிவிஎஸ் நகரில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், தனது பெரியப்பாவுமான மு.க.அழகிரியை நேரில் சந்தித்தார். வீட்டிற்குள் நுழையும் முன்பே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மு.க.அழகிரி வரவேற்க, உதயநிதி அழகிரியின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
உதயநிதி ஸ்டாலின் மற்றும் அழகரி இருவரும் மாறி மாறி பொன்னாடை போர்த்தி வரவேற்றுக் கொண்டனர். இந்த சத்திப்பின் போது தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏ தளபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வீட்டிற்குள் சென்று உறவினர்களை சந்தித்த பின் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி, “அமைச்சராக பதவியேற்ற பின் எனது பெரியப்பாவை சந்தித்து வாழ்த்து பெற வந்தேன். எனது பெரியப்பாவும் பெரியம்மாவும் ஆசிர்வதித்தனர். இருவரும் மனநிறைவோடு வாழ்த்தினர்” என்றார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, “தம்பி மகன் என்ற முறையில் எங்களிடம் ஆசி பெற வந்திருந்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் எனக்கு இன்னொரு மகன் தான். அவருக்கும் ஆசி வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளேன். நான் திருநகரில் உள்ள வீட்டில் இருந்த போது என் குழந்தைகளுடன் விளையாடியவர்கள் இன்று அமைச்சர்களாக உள்ளார்கள் என்பது எல்லை இல்லா மகிழ்ச்சியாக உள்ளது.
அதைவிட சந்தோசம், தம்பி முதலமைச்சராக உள்ளார். மகன் அமைச்சராகி உள்ளார்” என்றார். திமுகவில் இணைவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதை தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்து அனைவருக்கும் ஜல்லிக்கட்டு வாழ்த்து தெரிவித்து சென்றார் அழகிரி.
இதையும் படிங்க: தருமபுரி பெலமாரன அள்ளியில் களைக்கட்டிய 'எருது விடும் திருவிழா'