மதுரை மாவட்டம் திருமங்கலத் தொகுதிக்குள்பட்ட ஒரு லட்சத்து பத்தாயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, நாள்தோறும் 10 ஆயிரம் பேர் வீதம் காய்கறி தொகுப்புகளை தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேரடியாகச் சென்று வழங்கிவருகிறார்.
அந்த வகையில், திருமங்கலம் பகுதியில் உள்ள தெற்கு தெரு பகுதி மக்களுக்கு காய்கறித் தொகுப்பினை வழங்கும் நிகழ்வின்போது, ஊரடங்கினால், அப்பகுதியில் எளிமையாக நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி குறித்து அறிந்துகொண்டார். இதையடுத்து, நேரில் சென்று கர்ப்பிணியை ஆசிர்வதித்து, காய்கறித் தொகுப்பினை வழங்கினார்.
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மக்களிடையே பேசும்போது, சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தலின்படி மதுரை, சென்னை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் முழுஊரடங்கு உத்தரவு நான்கு நாள்கள் அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், மதுரையில் முழு ஊரடங்கு உத்தரவிற்கு அனைத்துத் தரப்பு பொதுமக்களும், பேரிடர் மேலாண்மைத் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அரசுக்கு உதவியாக, பேரிடர் மேலாண்மைத் துறை செயல்படும் என்றார்.
இதைத் தொடர்ந்து, திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். நாள்தோறும் காலை, மாலை என இருவேளையும் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தினக் கூலிகளுக்கு தரமில்லா அரிசி: அறமில்லாத செயல்!