வேகமாகப் பரவி வரும் கரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து, மே 3ஆம் தேதி முதல் மாநில அரசுகளின் உத்தரவுப்படி கிராமப்புறங்களில் ஊரக வளர்ச்சித் திட்டம் மூலம் 100 நாள் வேலை பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட திரளி கிராமத்தில் குறைவான வேலையாட்களுடன் தொடங்கிய 100 நாள் பணியை மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, 100 நாள் திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் பழங்கள் வழங்கி அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் ஊக்கப்படுத்தினர்.
பின்னர் பணியாளர்களிடம் பேசிய அமைச்சர், கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு, குறைந்த பணியாட்களை கொண்டு 100 நாள் திட்டத்தை தொடங்க உத்தரவிட்டது. இதில், 55 வயதிற்கு குறைவானவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருப்பது முதியவர்களை நிராகரிப்பதற்காக அல்ல. அவர்களை கரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகவே என்றார்.
மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்கள் முறையாக தகுந்த இடைவெளியை பின்பற்றவும், மருத்துவர்கள் கூறிய அறிவுரைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்கவும் வேண்டும் என்றும் அமைச்சர் உதயகுமார் கூறினார்.
இதையும் படிங்க: இனிமே வரும் 28 நாள்களுக்கு உஷார் மக்களே!