மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் செயல்படும் மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா விரகனூர் ரிங் ரோட்டில் உள்ள பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘20 லட்சம் மாணவர்களுக்கு டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 7 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறையும், 60 ஆயிரம் பள்ளிகளில் கணினியும், இன்டர்நெட் வசதியும் ஏற்படுத்தப்படும்.
மெட்ரிக் பள்ளிகளில் ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தப்படும். மெட்ரிக் பள்ளிகளில் கட்டப்பட்ட கட்டடங்களில் ஆய்வு செய்ய தமிழ்நாடு முதலமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். அதனடிப்படையிலும், அங்கீகார ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 70 லட்சம் மாணவர்களின் கல்வியை செழுமைப்படுத்துவதற்கே அங்கீகார ஆணை வழங்கப்படுகிறது. தனியார் பள்ளிகளிடம் அரசு பாரபட்சம் காட்டவில்லை. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டில் ஷூ, சாக்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: எந்த அரசுப் பள்ளியையும் மூடும் எண்ணம் இல்லை: செங்கோட்டையன்