மதுரை மாவட்டம் செல்லூர் பாலம் பகுதியில் கபாடி வீரர்களின் திறமையை சிறப்பிக்கும் விதமாக, மதுரை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கபாடி வீரர்கள் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதனை, இன்று (பிப்.20) கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சரிடம், திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளிலுள்ள மகளிர் சுய உதவிக்குழு கடன் ரத்து செய்வதாக மு.க. ஸ்டாலின் அறிவித்தது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு அவர் கூறியதாவது, “ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் இது போன்ற திட்டங்களை அறிவித்து வருகிறார்.
கூட்டுறவு வங்கிகள் மூலம் மட்டும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பட்ஜெட் வரவு செலவு திட்ட கணக்கு தெரியாமல் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பதை போன்று அவர் அறிவித்து வருகிறார். கூட்டுறவு வங்கி கடனை ரத்து செய்யும் திட்டத்தை அறிவிக்கும்போது சாத்தியம் ஆகுமா என்பதை கேட்டு அறிந்துகொண்டு பின்னர் அறிவிக்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து ஏராளமானோர் புதிதாக வங்கியில் நகை கடன் பெற்று கடனாளியாக உள்ளனர். திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அவர் அறிவிப்பதில்லை ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக இதுபோன்ற அறிவிப்பை கூறி வருகிறார்” என்றார்.
மதுரையில் தொடரும் பெண் சிசு கொலை குறித்த கேள்விக்கு, “தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் பெண் சிசு கொலை நடைபெறுகிறது. பெருமளவில் பெண் சிசு கொலை தடுக்கப்பட்டுள்ளது. தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் இதுவரை 4ஆயிரத்து457 பெண் குழந்தைகளும், ஆயிரத்து537 ஆண் குழந்தைகளும் காப்பாற்றப்பட்டு, அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். பெண் சிசு கொலையில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் தண்டனைக்கு உரியவர்கள். அவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கருவிலிருந்து கல்லறை செல்லும் வரை பெண் குழந்தைகளுக்கான பல்வேறு நல திட்டங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. 10ஆவதாக பிறந்த அப்துல்கலாம் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக நாடே போற்றும் அளவிற்கு உயர்ந்தார். எந்த தாயும் பெண் சிசுக் கொலை செய்வதை தவிர்க்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: பிறந்த ஒரு மணி நேரத்தில் வீதியில் வீசப்பட்ட பெண் குழந்தை; வேலூரில் கொடூரம்