மதுரை கல்லுபட்டி பேரூராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளி மாணவ, மணவியர்களுக்கு ஒரு கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பில் மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
முன்னதாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மின்கலன் மூலம் இயங்கும் வாகனங்களை கல்லுபட்டி பேருந்து நிலையத்தில் இருந்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கிவைத்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயகுமார் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்ட மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. தற்போது சாலை அமைக்கும் பணிகள், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிதி உதவி செய்யும் ஜப்பானிய நிதி மானியக்குழுவும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. அந்த ஆய்வின் முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
எய்ம்ஸ் அமைப்பதற்கான திட்டப் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், ஏன் நிதிநிலை அறிக்கையில் அது இடம்பெறவில்லை என்றும், இப்போது ஏன் அறிவிக்கவில்லை என்றும், ஒவ்வொருவராக ஆடிட்டர் போன்று கேள்வி கேட்டுக்கொண்டிருந்தால் அதற்கு விளக்கம் சொல்வதற்கு நேரமும், காலமும் இல்லை.
வனத்துறை அமைச்சர், பழங்குடியின சிறுவனை காலணியை கழற்ற சொல்லி நிகழ்வு குறித்து உரிய விளக்கமும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். முதுமையின் காரணமாக ஏற்பட்ட சம்பவம் குறித்து பெரிய அளவில் விமர்சனத்திற்கு கொண்டு சென்றதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஒருமுறை முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் சட்டப்பேரவையில் முதலமைச்சராக இருந்தபோது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி கூறுகையில், நாங்க சாப்பிட்ட எச்சி இலையைத்தான் தற்போது நீங்கள் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றார். இதற்கு பதிலளித்த எம்ஜிஆர், நீங்கள் எவ்வளவு மக்கள் பணத்தை சாப்பிட்டு உள்ளீர்கள் என்ற கணக்கைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று பதிலடி கொடுத்தார்.
ஆகையால் ஒருவருக்கு ஒருவர் சலிக்காமல் அனைவரும் கைதேர்ந்தவர்கள். பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் விமர்சனத்தை எதிர்கொள்வதற்கான பாடத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கற்றுக்கொடுத்துள்ளார். விமர்சனங்களை எண்ணி பொது வாழ்க்கையில் இருந்து விலகிவிட முடியாது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ரஜினி குறித்தெல்லாம் கருத்து கூறமுடியாது' - அமைச்சர் உதயகுமார்