மதுரை : பேரையூர் தாலுகாவுக்கு உள்பட்ட முருகநேரி கிராமத்தில் அழகர்சாமி எனவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலையில் இன்று (அக்.23) ஏற்பட்ட திடீர் விபத்தால், ஒரே அறையில் இருந்த காளிஸ்வரி, சுருளியம்மாள், அய்யம்மாள், லெட்சுமி, வேலத்தாய் ஆகிய ஐந்து பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
லெட்சுமி, மாகலெட்சுமி, சுந்தர மூர்த்தி ஆகிய மூவரும் 80 விழுக்காடு தீக்காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் இருவரும் சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.
![Fireworks factory accident Fireworks factory blast](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9288200_pic.jpg)
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் 37 பேர் பணியாற்றி உள்ளனர். விபத்தில் சம்பவ இடத்திலேயே ஐந்து பெண்கள் உயிரிழந்தனர். தீக்காயப் பிரிவில் மூன்று பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விரைவில் நிவாரணம் அறிவிப்பார். விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை, முறையான உரிமம் பெறப்பட்டதாகும். விபத்து தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை நடத்துவார்கள்.
பட்டாசு ஆலைகள் கவனத்துடன் செயல்பட வேண்டும். பாதுகாப்புடன் பட்டாசு ஆலைகள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலம் என்பதால் அதிக உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்படக் கூடாது. தமிழ்நாடு அரசின் வழிமுறைகளை பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும்" என்றார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கு செலவிற்கு தலா 10 ஆயிரம் ரூபாயும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாயையும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.
இதையும் படிங்க: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 5 பெண்கள் உயிரிழப்பு