மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், பெருங்குடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கரோனா தடுப்புக் காலத்தில் தோட்டக்கலைத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வினய், வேளாண்மை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "பொதுப்பணித் துறை அலுவலர்களின் செயல்பாட்டால் கோடைகாலத்தில் மதுரை மாவட்டம் தண்ணீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக இருந்துவருகிறது.
மதுரைக்குப் பெயர்போன மல்லிகை மலர் சாகுபடி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவருகிறது.
ஊரடங்கால் இந்த மல்லிகைப் பூவினை சந்தைப்படுத்துவதற்குப் பல சிக்கல்கள் எழுந்துவரும் நிலையில், மதுரை, திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களை ஒன்றிணைத்து நறுமணப் பொருள்கள் தயாரிப்பதற்காக மலர்கள் அனுப்பப்பட்டுவருகின்றன. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற்றுவருகின்றனர்.
சோழவந்தான் பகுதிகளில் தேங்காய் உற்பத்தி அதிகமாக உள்ளதால் மகாராஷ்டிரா போன்ற தேங்காய் தேவையுள்ள பிற மாநில முதலமைச்சர்களுடன் பேசி அவற்றை விற்பனை செய்யவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகின்றன.
காய்கறிப் பொருள்கள் தோட்டக்கலைத் துறை மூலமாக ஆங்காங்கே கடைகளுக்கோ, மாநகராட்சியின் சார்பாக நேரடியாக வீட்டிற்கோ சென்று விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. குண்டாறு, வைகையின் கிளை ஆறுகள், ஏரி, குளங்கள் அனைத்தும் விவசாயத்திற்கு பயன்படுத்தும்வகையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருகின்றன" என்றார்.
இதையும் படிங்க: கரோனாவால் வாடும் பூ வியாபாரிகள்!