மதுரை: ஆனையூர் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில், சுமார் 722 குடும்பங்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (நவ.24) நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
இலங்கைத் தமிழர்களுக்கு உதவி
நிகழ்ச்சியில் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், 'கடந்த 30 நாட்களில் இலங்கைத் தொடர்பான 25 கோப்புகளில் கையெழுத்திட்டேன். அதில் கல்வி, தொழில் முனைவோர் உள்ளிட்ட எல்லா கோப்புகளும் வந்தன.
இந்திய குடியுரிமை உள்ளவர்களுக்கு கிடைக்கும் அனைத்தும், சமமாக இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசால் செய்யப்பட்டு வருகிறது.
எனது துறை அலுவலர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையம் குறித்த தகவல்களை சேமித்து வைக்க தனி கணினி ஒதுக்கி, தமிழ்நாடு அரசு சார்பில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்ற தகவல்களை சேமித்து வைக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளேன்.
இங்கு உள்ள வீடுகள் சீர் செய்யப்பட வேண்டியுள்ளன.
அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் சீராக தமிழ்நாடு முதலமைச்சர் செய்வார்.
அண்மையில் கொழும்புவில் உள்ள தூதரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்போது இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இங்கிருந்து என்ன செய்ய முடியும் என்பதை யோசித்து உதவி செய்யத் தயாராக தமிழ்நாடு முதலமைச்சர் இருப்பதாக கொழும்பு தூதரிடம் கூறினேன்.
கண்டிப்பாக இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத் திட்டங்கள்
இவரைத் தொடர்ந்து வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி பேசுகையில், 'கடந்த 25 ஆண்டுகளாக இலங்கை வாழ் தமிழர்கள் ஒரு குடும்பத்தைப் போல இங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நிலையை உயர்த்த தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இப்பகுதியில் பாதாள சாக்கடையை சீரமைத்துள்ளதுடன், அதே போல அனைத்து வீடுகளுக்கும் கூட்டு குடிநீர் திட்டம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது' என்றார்.
இதையும் படிங்க: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை