கரோனா தொற்றால் மதுரை ரயில்வே கோட்டத்தில் அலுவலர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். கரோனா முதல் அலையில் தொற்று பாதித்த மேத்யூ, பிரபாகர், மூர்த்தி, ரயில்வே தலைமைக் காவலர் ஸ்ரீனிவாசன் ஆகியோரும், இரண்டாவது அலையில் ஜெகதீசன், பேபி ரமணி, செல்வராஜ், சுரேஷ்பாபு, சிவராஜ், முத்துக் கருப்பணன், டிராலிமேன் சோமு ஆகியோரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
இவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனித்தனியே கடிதம் மூலம் ஆறுதல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "இந்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த நிர்வாகம் சார்பில் எனது அனுதாபங்களை தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொள்கிறேன். கடந்தாண்டு முதலே உலகம் முழுவதும் கண்ணுக்குத் தெரியாத எதிரியான கரோனா தொற்று நோயை எதிர்த்துப் போராடி வருகிறோம்.
கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தன்னலமற்ற சேவையில் ரயில்வே தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. இந்நேரத்தில் ரயில்வே ஊழியர்களின் அர்ப்பணிப்பிற்கும், கடின உழைப்புக்கும் நாங்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பைத் தாங்கும் வலிமையை இறைவன் வழங்கட்டும்" என்று அதில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 1913க்கு ஒரு ரீங் விட்டா போதும்' - கரோனா நோயாளிகளுக்காக சென்னை மாநகாரட்சியின் அறிவிப்பு