சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், செப்டம்பர் 2ஆம் வாரத்திலிருந்தே இதனைப் பார்வையிடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் பிரபலம் வாய்ந்த சுற்றுலாத்தளம் போலவே கீழடி கிராமம் காட்சியளிக்கத் தொடங்கியது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏறக்குறைய நான்கரை லட்சம் பேர் கீழடி அகழாய்வுக் களத்தைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். தற்போது முழுவதுமாக பார்வையாளர்கள் வருகை தடைசெய்யப்பட்டுவிட்டது. இதுவரை கீழடி அகழாய்வுக் களத்திலுள்ள குழிகளில் இருக்கம் உறைகிணறு, செங்கல் கட்டுமானங்களை மட்டுமே பொதுமக்கள் பார்வையிட்டு வந்தனர்.
கீழடியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பொதுமக்களும் காணும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதன் காரணமாக தமிழ் பண்பாடு மற்றும் மொழி வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கீழடியில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் பணி முடிவடையும்வரை அதன் பொருட்கள் அனைத்தையும் மதுரை உலகத் தமிழ் சங்க வளாகத்தில் காட்சிப்படுத்தப்படும் என அறிவிப்பு செய்துள்ளார்.
இக்கண்காட்சி தற்காலிகமாக செயல்படும் எனவும் மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச் சாலையில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் பணிகள் நிறைவடைந்த பின்னர், அப்பொருட்கள் அனைத்தும் அங்கே கொண்டு செல்லப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: ’கீழடி வரலாறு ஆண், பெண், சாதி பேதம் இல்லாதது’ - சு.வெங்கடேசன்