மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் கடந்த ஆகஸ்ட். 26ஆம் தேதி நிறுத்து வைக்கப்பட்டு இருந்த சுற்றுலாப் பயணிகளின் ரயில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. யாரும் எதிர்பாராத வண்ணம் நிகழ்ந்த விபத்தைத் தொடர்ந்து, ரயிலில் பற்றிய தீ அருகே இருந்த மற்றொரு ரயிலுக்கும் பரவியது.
அதைத் தொடர்ந்து, எரியும் ரயிலில் இருந்து பலரும் உயிர் தப்பிய நிலையில் சில பயணிகள் மட்டும் வெளியேற வழியின்றி ரயிலின் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். இந்த நிலையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் கொழுந்து விட்டு எரிந்த தீயை போராடி அணைத்தனர்.
இருப்பினும், இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்திற்கான காரணமாக, ரயிலில் சட்ட விரோதமாக சிலிண்டரை பயன்படுத்தியதே என ரயில்வே தரப்பில் இருந்து விபத்தின் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் உயிரிழந்த 9 பேரில் 7 பேர் அடையாளம் காணப்பட்டு, மீதம் உள்ள இரண்டு பேர் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: Madurai Train Fire Accident: வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள்.. பூட்டப்பட்ட கதவுகள்.. அப்பட்டமான விதிமீறல்..?
இந்த நிலையில் 9 பேரின் உடல்களும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. தமிழக அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா ஆகியோர் இறந்த உடல்களுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து மதுரை ரயில்வே காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன், 3 ஆம்புலன்ஸ் மூலம் 9 பேரின் உடல்களும் சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து விமான மூலம் 9 பேரின் உடல்களும் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இந்த தீ விபத்து குறித்த சட்டப்பூர்வ விசாரணை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு ஸ்டேசன் யார்டு தலைமையில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகத்தில் உள்ள டிஆர்எம் மாநாடு அரங்கில் தொடங்கும் என்றும் தீ விபத்து குறித்த விவரங்கள் தெரிந்தோர் சாட்சியமளிக்க விரும்பினால் ஆர்எம் மாநாடு அரங்கில் தகவல் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரயிலில் நெய் கொண்டு செல்ல தடையா? - என்னென்ன பொருட்களை ரயில் பயணத்தில் கொண்டு செல்லலாம்?