மதுரை: முதலமைச்சர் காலை உணவு விரிவாக்கத் திட்டம், மதுரை முத்துப்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியகராஜன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து குழந்தைகளுடன் அமர்ந்து அமைச்சர் பி.டி.ஆர் உணவருந்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம், காலை உணவு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதிமுக மாநாட்டில் உணவு வீணானது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், நான் அரசியல் பேச விரும்பவில்லை. திட்டமிடுதல் சரியாக இருக்க வேண்டும். அடுத்தவர்களைப் பற்றி நான் பேச விரும்பவில்லை என்றார்.
பிறகு அவர், கல்வியும் சுகாதாரமும் இரண்டு கண்கள் என்று முதல்வர் சொல்வதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக குழந்தைகளுக்கு காலை உணவு கிடைக்காவிட்டால் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே, முன்னுதாரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி எனது தொகுதியில் துவக்கி வைத்தோம், மாதிரி திட்டமாக அது அமைந்தது. இன்று பத்தாயிரம் பள்ளிகளில் விரிவுபடுத்தியுள்ளோம்.
அரசாங்கத்தின் நிதி நிலை பற்றி பேசுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் எந்த இலக்கை அடைய, யாருக்கான திட்டத்திற்கு பணம் செலவாகிறதோ அதை வரையறுக்க வேண்டும். ஒரு மாணவருக்கு 12 ரூபாய் 40 பைசாவில் தரமான உணவு வழங்குவது இதைவிட சிறந்த செலவு இருக்க முடியாது. இதனுடைய பலன் 10, 20 வருடத்திற்கு கிடைக்கக்கூடிய மிகச் சிறந்த விளைவாக இருக்கும்.
சிறந்த கல்வி மற்றும் ஊட்டச்சத்து பெற்ற இளைஞர்கள் தான் நாட்டின் பெரிய சொத்து. இந்த செலவு மூலம் அது கிடைக்கும். கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்த அரசாங்கம் பல நன்மைகளை செய்திருந்தாலும். இது ஒரு சிறப்பான திட்டம். கொள்கை நோக்கத்திலும் சிறப்பு, அதற்கு மேல் இந்த நிதிக்கு இந்த பலனை கொடுத்துள்ளது சிறப்பான திட்டம் என்றார்.
இதையும் படிங்க: ஆவின் பொருட்கள் விற்பனை 25 சதவீதம் அதிகரிக்கும் - அமைச்சர் மனோ தங்கராஜ்