மதுரை: கரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்கும் வகையில், மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி இன்று (ஆக. 6) தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரோனா தொற்றின் மூன்றாவது அலையை சந்திப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. ஆக்ஸிஜன் நிரம்பிய படுக்கைகள் ஏராளமாக உள்ளன.
நூலக இடத்தில் அரசியல்
கிராமப்புறங்களிலும் தடுப்பூசிகள் வருகைக்குப் பிறகு, தடுப்பூசிகளை செலுத்த தயாராக உள்ளோம். மூன்றாவது அலையின் மூலமாக, அதிகமான பாதிப்பு வந்து விடாது என நம்புகிறோம். அதேசமயம் பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
அரசு வழிகாட்டுதலின்படி, பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூடியதற்காக, பூ மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தொற்று அதிகரிக்கும் இடங்களிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மக்கள் எதிர்பார்க்கக் கூடிய இடத்தில் நிச்சயமாக கலைஞர் நூலகம் அமையும். நூலகம் அமையவிருக்கும் இடத்தைப் பற்றி எதிர்க்கட்சியினர் பேசுவது அரசியலுக்காக மட்டுமே. சார்பதிவாளர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது என்பதற்காக, எழுத்தாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
படிப்படியாக எளிமையான முறை
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எழுத்தாளர்களின் பதிவு எண்களைப்போல, சில இடங்களில் பத்திரம் எழுதும் வழக்கறிஞர்களும் பார்கவுன்சிலில் எண்களைப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
படிப்படியாக பத்திரப்பதிவு எளிமையான முறையில் மாற்றப்படும். ரம்மி விளையாட்டுத் தொடர்பான நீதிமன்ற விவாதங்களில் நான் தலையிட தயாராக இல்லை.
கடந்த கால ஆட்சியில் முதியோர் உதவித்தொகை உட்பட, பட்டா வழங்கலில் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போது ஆயிரக்கணக்கான மனுக்கள் வந்து குவிந்திருக்காது. கடந்த கால ஆட்சியாளர்கள், உத்தேச பட்டா என பெயர் அளவுக்கு மட்டுமே பட்டா கொடுத்துவிட்டு சென்றிருக்கின்றனர்” என்றார்.
இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பும் முழு விவரமும்!