மதுரை மாவட்டத்தில் அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கு இடம் தேர்வு செய்வதற்காக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர்.
மதுரையில் 70 கோடி ரூபாய் மதிப்பில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் அமைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
![மதுரையில் அமைச்சர்கள் ஆய்வு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-07-school-minister-library-script-7208110_17062021171905_1706f_1623930545_91.jpg)
அதற்காக மதுரை நகர் பகுதிகளில் 6 இடங்கள் பரிசீலனையில் உள்ளன. அதில் எந்த இடத்தில் நூலகம் அமைக்கலாம் என்பது குறித்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், உலக தமிழ்ச்சங்க வளாகம், அரசு மீனாட்சி மகளிர் கல்லூரி உள்ளிட்ட 4 இடங்களில் அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர். அப்போது அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
![அரசு மீனாட்சி மகளிர் கல்லூரி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-07-school-minister-library-script-7208110_17062021171905_1706f_1623930545_792.jpg)
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, "கலைஞர் நினைவு நூலகம் மூலமாக போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறுவர். அறிவொளி தருகின்ற கலங்கரை விளக்கமாக அமைய வேண்டும் என்கிற நோக்கத்தில் நூலகம் நிறுவப்பட உள்ளது. கலைஞர் நினைவு நூலகம் அமையவுள்ள இடம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து விரைவில் அறிவிக்கப்படும்.
![மதுரையில் அமைச்சர்கள் ஆய்வு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-07-school-minister-library-script-7208110_17062021171905_1706f_1623930545_595.jpg)
இந்தாண்டு நீட் தேர்விற்கு பயிற்சி வகுப்புகள் நடத்துவது குறித்து முதலமைச்சர் டெல்லியில் இருந்து திரும்பிய பின்னர் பேசி முடிவெடுக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து இன்னும் ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்படவில்லை. அது வந்த பின்னர் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தாண்டு அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் அதிகம் சேர்வார்கள். அவர்கள் அனைவருக்கும் தரமான கல்வியை உறுதி செய்வதில் அரசு தயாராக உள்ளது. தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து பெற்றோர்கள் அச்சம் இன்றி புகார் அளிக்கலாம். உடனே நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகள் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவு தேர்வு நடத்துவது தொடர்பாக தவறான தகவல் பரவி வருகின்றன" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புனேவில் இருந்து சென்னை வந்த 3,76,000 கோவிஷீல்டு தடுப்பூசி