மதுரை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு புதுநத்தம் சாலையில் சுமார் 215 கோடி ரூபாய் செலவில் 'கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம்' கட்டப்பட்டு, தற்போது திறப்பு விழாவுக்குத் தயாராக உள்ளது. இதற்கான விழா காமராஜர் பிறந்தநாளான வருகிற 15ஆம் நாள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அடுத்தபடியாக மிகப் பிரமாண்டமாக மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம், 19 ஆயிரத்து 826 சதுர மீட்டரில் அடித்தளம் தவிர மொத்தம் ஆறு தளங்களுடன் அமையவுள்ளது. ஒவ்வொரு தளமும் சராசரியாக 2 ஆயிரத்து 500 சதுர மீட்டரில் அமைந்துள்ளது.
அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடமும், தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டுக் கூடம், முக்கிய பிரமுகர்கள் அறை, சொந்த நூல் படிக்கும் பிரிவு, பல்வகைப் பயன்பாட்டு அரங்கமும், முதல் தளத்தில் குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ் பிரிவு, குழந்தைகளுக்கான நூலகப்பிரிவு, அறிவியல் உபகரணப் பிரிவு உள்ளது.
2ஆம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு (குறிப்புதவி), 3ஆம் தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவு, ஆராய்ச்சி இதழ்கள் பிரிவு, தமிழ் நூல்கள் பிரிவு, 4ஆம் தளத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பிரிவு ஆகியவை இடம் பெற்றுள்ளன. 5ஆம் தளத்தில் அரிய நூல்கள் பிரிவு, மின் நூலகம், பல்லூடகப் பிரிவு, ஒளி, ஒலி தொகுப்புகள் காட்சியகப் பிரிவு, மின்னுருவாக்கப் பிரிவு, பார்வையற்றோருக்கான மின்நூல் ஒலி நூல் அரங்கம், 6 ஆம் தளத்தில் நூல் பகுப்பாய்வு நூற்பட்ட தயாரித்தல் பிரிவு, நூலக நிர்வாகப் பிரிவு, நூல்கள் கொள்முதல் பிரிவு, பணியாளர்கள் உணவருந்தும் அறை என அமைக்கப்பட்டுள்ளன.
கலைஞர் நூலகத்திற்கான நிதி செலவினம் ரூ.114 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.215 கோடியாக உயர்ந்துள்ளது. ரூ.132 கோடி கட்டிடத்திற்கும், ரூ.60 கோடி நுல்களுக்கும், ரூ.18 கோடி மர சாமான்களுக்கும், ரூ.5 கோடி கணினிகளுக்கும் செலவிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், வருகிற 15ஆம் நாள் மாலை 5 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்புரை நிகழ்த்துகிறார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மேலும் இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக ஹெச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் அவரது மகளும் ஹெச்.சி.எல். குழுமத்தின் தலைவருமான ரோஷினி நாடார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ஜூலை 15ஆம் நாள் நடைபெறுகின்ற இவ்விழாவுக்காக கலைஞர் நூலகத்தில் தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: EPS பெயர் அங்கீகாரம், கோடநாடு விவகாரம் - OPS கொடுத்த அந்த ரியாக்ஷன்!