மதுரை: தனியார் நிறுவனங்கள் மூலம் மினி கிளினிக்கில் மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தால், அப்பணி நியமனம் செல்லாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த வைரம் சந்தோஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாட்டில் 2,000 மினி கிளினிக் தொடங்குவதற்கான அரசாணை 2020 டிசம்பர் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் தொடங்கப்படவுள்ள 2,000 மினி கிளினிக்குகளில் 585 மருத்துவ உதவியாளர்களும், 1,415 செவிலியர்களும் பணியமர்த்தப்படவுள்ளனர். அவர்கள் தனியார் ஏஜென்சி மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் ஏஜென்சி மூலம் தேர்வு செய்யப்படுவதால், முன்பதிவு, இன சுழற்சி முறை, வேலைவாய்ப்பு பதிவு ஆகியவை முறையாக பின்பற்றப்படுவதில்லை. கரோனா நோய்தொற்று நேரங்களில் ஏஜென்சி மூலம் அனுபவமில்லாத செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவது சரியானதாக இருக்க முடியாது. எனவே சுகாதாரத்துறை இயக்குனர், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்களை ஏஜென்சி மூலம் தேர்வு செய்ய வெளியிட்ட அறிக்கையை ரத்து செய்ய உத்தரவிடும்படி குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுந்தரேஸ் மற்றும் ஆனந்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மினி கிளினிக் மருத்துவ பணியாளர்கள் மத்திய சுகாதாரத்துறை இயக்குநரகம் பரிந்துரையின் அடிப்படையில், மாவட்ட அளவிலான குழு அமைத்துதான் நியமனம் செய்யப்படுகிறார்கள். முற்றிலும் இது தற்காலிக பணிதான் என அறிக்கையை தாக்கல் செய்தார்.
கரோனா தொற்று காலத்தை அவசர நிலையாக கருதி அரசு இந்த நிலை எடுத்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த பணிகள் என்பது ஓராண்டு தற்காலிக பணியே என்றும் இந்த பணி நியமனம் என்பது முற்றிலும் மாவட்ட அளவிலான சுகாதார குழு அமைத்து அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றியே நடைபெறுவதாக கூறப்பட்டது.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், அரசு தெரிவித்துள்ள முறையின்படி இந்த பணியாளர்கள் நியமனம் மாவட்ட சுகாதாரக் குழு மூலமாகவே நடைபெற வேண்டும். ஒருவேளை தனியார் நிறுவனங்கள் மூலமாக பணி நியமனங்கள் செய்யப்பட்டிருந்தால், அவை செல்லாது. தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் ஓராண்டுக்கு மேல் பணிபுரிய நேரிட்டால் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக பணிகளை நியமனம் செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.