தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியை சேர்ந்த அம்மாவாசை என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் "நான் பழனிசெட்டிப்பட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக உள்ளேன். தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து பிரித்து, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தனியாக ஆரம்பிக்கப்பட்டது.
மதுரை ஆவினில் இருந்து பிரிந்த தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 4 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். மேலும் 13 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்தெடுக்கப்படவேண்டிய நிலையில் இருந்தபோது, எவ்வித முன் அறிவிப்புமின்றி தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 17 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி அன்று பதவியேற்றனர்.
தற்போது தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக தமிழக துணை முதல்வரின் தம்பி ஓ.ராஜா உள்ளார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பலர் அதிமுகவை சேர்ந்தவர்கள். எனவே தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 17 உறுப்பினர்கள் செயல்பட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இடைக்கால நிர்வாக குழு உறுப்பினர்கள் 17 பேரும் செயல்பட தடை விதித்ததை நீக்கக் கோரிய வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இந்த தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆவின் நிறுவனம் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த்து இந்த வழக்கு இன்று நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதிகள் விரிவான விசாரணைக்காக ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.