மதுரை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனியார் காப்பகம் இயங்கிவருகிறது. ஆதரவற்ற முதியோர்களும் இங்கே பராமரிக்கப்பட்டுவருகின்றனர். இந்தக் காப்பகத்தில் தங்கியுள்ள திருமணமாகாத 45 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் திடீரென வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார்.
இதையடுத்து காப்பகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அந்தப் பெண்ணை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர், அப்பெண் ஒன்பது மாதம் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தங்களது புகாரைப் பதிவுசெய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காப்பக ஊழியர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டு நிகழ்ச்சிகளில் உறவினர்கள் பங்கேற்ற நிலையில் அவர்களில் யாரேனும் இதற்குக் காரணமாக இருப்பரோ என்ற கோணத்திலும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: போதையில் கார் ஓட்டுநரை தாக்கிய எஸ்.ஐ மீது வழக்குப்பதிவு