மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டப பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் மண்டபம் முழுமையாக இடிந்து சேதமடைந்தது. இதனை அடுத்து கோயிலுக்குள் 2019 ஆம் ஆண்டு தற்காலிக தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
இதனை அடுத்து நிரந்தர இடம் தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. அதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக கட்டுமான பணியில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள வடக்கு சித்திரை வீதி மற்றும் கீழ சித்திரை வீதி சந்திப்பில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைப்பதற்காக ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. புதிய தீயணைப்பு நிலையத்தை வருகின்ற 2023ஆம் ஆண்டுக்குள் கட்டுமான பணி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதி கழகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பல நூறு கோடி மதிப்புடைய 14 பழங்கால சிலைகள் மீட்பு - சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை