மதுரை: மதுரையைச் சேர்ந்த வைரம் சந்தோஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ”தமிழ்நாட்டில் 2000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்குவதற்கான அரசாணை, 2020 டிசம்பர் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் பணிபுரியும் செவிலியருக்கு சம்பளமாக ரூ.14000, மருத்துவ உதவியாளர்களுக்கு ரூ.6000 வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் தொடங்கப்படவுள்ள 2000 மினி கிளினிக்குகளுக்காக 585 மருத்துவ உதவியாளர்களும், 1415 செவிலியர்களும் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இதற்காக சுகாதாரத் துறை இயக்குனர் 2020 டிசம்பர் 15ஆம் தேதி பணியாளர் நியமனம் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன்படி தனியார் ஏஜென்சி மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் ஏஜென்சி மூலம் தேர்வு செய்யப்படுவதால் முன்பதிவு, இன சுழற்சி முறை, வேலைவாய்ப்பு பதிவு ஆகியவை முறையாக பின்பற்றப்படுவதில்லை.
கரோனா நோய் தொற்று நேரங்களில் அனுபவமில்லாத செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஏஜென்சி மூலம் தேர்வு செய்யப்படுவது சரியானதாக இருக்க முடியாது. எனவே சுகாதாரத் துறை இயக்குனர் மருத்துவ பணியாளர்கள் செவிலியர்களை ஏஜென்சி முறையில் தேர்வு செய்ய 2020 டிசம்பர் 15ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையை ரத்து செய்து உத்தரவிடும்படி” கோரியிருந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரணை செய்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி அமர்வு, மினி கிளினிக்கிற்கு செவிலியர்கள் நியமனம் தொடர்பாக தற்காலிக நிலை தொடர உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் துறை இயக்குனர் சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மினி கிளினிக் கரோனா தொற்று காலத்திற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஏற்பாடு. அரசு தலைமை மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்படுவது மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் MRB மூலம் நடத்தப்படும்.
மினி கிளினிக் அவசர நிலையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக நியமனம் செய்வது மட்டுமே. இதில் நியமிக்கப்படும் மருத்துவ பணியாளர்களின் பணி நியமனம் என்பது மத்திய சுகாதாரத் துறை இயக்கம் பரிந்துரையின் அடிப்படையில் குழு அமைத்து பணி நியமனம் செய்யப்படுகிறது என பதில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மனுதாரர் தரப்பில் நீதிமன்ற உத்தரவை மீறி தற்போது பணி நியமனங்கள் நடைபெற்று வருகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனையும் படிங்க: சட்டப்பேரவை தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு