தூத்துக்குடி மாவட்டம் சுப்பையாபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் படித்தேன். மருத்துவப் படிப்புக்காக எழுதிய நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதால், ஜூலை 13ஆம் தேதி இளங்கலை மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டேன். கலந்தாய்வில் பங்கேற்று, அவர்கள் கேட்ட அனைத்து சான்றிதழ்களையும் வழங்கினேன். எனது பெற்றோரின் சான்றிதழ்களையும் வழங்கினேன்.
அப்போது எனது தந்தை இலங்கையில் உள்ள இரத்தினபுரா மாவட்டத்தில் பிறந்த சான்றிதழ்களையும் வழங்கினேன். மேலும் அதன் பின்பு அவர் கர்நாடகாவில் உள்ள மங்களூர் பல்கலைகழக்கத்தில் B.COM பட்டம் பெற்ற சான்றிதழையும் வழங்கினேன். எங்கள் மூதாதையர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், எங்கள் பூர்வீகம் திருச்சி அருகில் உள்ள முசிறி ஆகும்.
இலங்கை தூதரகமே எனக்கு இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் என சான்றிதழ் வழங்கியுள்ளது. எனது பள்ளி படிப்பு முழுவதையும் தமிழ்நாட்டில்தான் படித்துள்ளேன். இருப்பிட சான்றிதழ்கள் அனைத்தும் வழங்கியும் எனக்கு இடம் ஒதுக்கவில்லை. இது விதிமுறைக்கு மாறானது. எனவே என்னை 2019-2020ஆம் ஆண்டில் மருத்துவ கல்லூரியில் சேர்க்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், மாணவர் கருப்பசாமியின் பள்ளி, இருப்பிட சான்றிதழ்களை ஆய்வு செய்து உறுதி செய்தபின், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் அவர் தகுதியின் அடிப்படையில் இடம் வழங்க மருத்துவ கல்வி துறையின் முதன்மைச் செயலருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.