கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் பரவலைத் தடுக்க மதுரை மாநகரக் காவல்துறை மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், வைரஸ் தொற்றின் வேகம் தீவிரமாக இருக்கிற காரணத்தால், இன்றிலிருந்து வெளியே வருகின்ற அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்து கடுமையான அபராதம் விதிக்க மதுரை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
மேலும், அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்கின்ற இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படுகிற கியூஆர் கோடுள்ள அடையாள அட்டைகளைப் பெறவேண்டும் என மதுரை மாநகரக் காவல்துறை அறிவித்தது.
அந்த அட்டையைப் பெற ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த அட்டைகளைப் பெற காலை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டது. இதனால், யாருக்கும் அடையாள அட்டை வழங்க முடியாமல் தவித்த அலுவலர்கள், கியூஆர் கோடு அடையாள அட்டை முறைக்கு பதிலாக பழைய நடைமுறையே தொடரும் என அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்கள் கலைந்து சென்றனர். அடையாள அட்டைகளைப் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட மக்களால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: கரோனா: மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர் தாய் உயிரிழப்பு