சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் 2014ஆம் ஆண்டுமுதல் மத்திய, மாநில தொல்லியல் துறை மூலமாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. 2017ஆம் ஆண்டுமுதல் தமிழ்நாடு தொல்லியல் துறை இப்பகுதிகளில் தொடர் ஆய்வினை மேற்கொண்டுவருகிறது.
ஆறாம்கட்ட அகழாய்வுப் பணிகளை 2019 பிப்ரவரி 19ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். இந்தமுறை கீழடி மட்டுமன்றி கூடுதலாக கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளும் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
இதையடுத்து, கீழடி, கொந்தகையில் ஆறாம்கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. கரோனா தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு அறிவித்ததன்பேரில் அகழாய்வுப் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின்பு குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு கடந்த செவ்வாய்க்கிழமை அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கின.
இதுவரை அகழாய்வுப் பணிகள் தொடங்கப்படாமல் இருந்த மணலூர் பகுதியிலும் இன்றுமுதல் தொடங்கும் எனத் தமிழ்நாடு தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தேனியில் 2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு