மதுரை மாவட்டம் மேலக்கால் அருகே கொடிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிவமூர்த்தி. பொறியாளர் பட்டதாரியான இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், சிவமூர்த்தி தனது தோட்டத்துக்கு செல்லும் போது வழிமறித்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பியோடினர்.
இதனால் சம்பவ இடத்திலேயே சிவமூர்த்தி ரத்த வெள்ளத்தில் பலியானார். இச்சம்பவம் குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து முதற்கட்ட விசாரணையில், இறந்த சிவமூர்த்தி கடந்த மார்ச் மாதம் சிவகங்கை மாவட்டம் வேலாங்குளம் கண்மாய் பகுதியில் அருண் என்பவரை வெட்டி கொலை செய்துள்ளார். அந்த வழக்கில் தொடர்புடைய அவர் கைதாகி ஜாமீனில் வெளிவந்து நிபந்தனை ஜாமீனில் மதுரை சோழவந்தான் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அருணை கொலை செய்ததற்கு பழிக்கு பழியாக அவரது ஆதரவாளர்கள் சிவமூர்த்தியை கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து கொலை குற்றவாளிகளை மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீஸார் தேடி வருகின்றனர்.