மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் உழவர் சந்தை கடந்த 1999ஆம் ஆண்டு நவம்பர் 14 அன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இதுதான் தமிழ்நாட்டின் முதல் உழவர் சந்தையாகும். மதுரை அண்ணா நகரைச்சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் காய்கறி மற்றும் பழங்கள் தேவையை இந்த உழவர் சந்தையே நிறைவேற்றி வருகிறது.
இந்நிலையில், மதிய உணவுப்பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் சார்பாக, தூய்மை மற்றும் பசுமை காய்கறிகளுக்கான சிறந்த சந்தையாக அங்கீகரிக்கப்பட்டு அண்ணா நகர் உழவர் சந்தைக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பாக வளாகம் முழுவதும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. மேலும் விற்பனைக்காக வருகின்ற உழவர்கள் அனைவருக்கும் மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கடையையும் நிர்வகிப்பதற்கான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. காய்கறிகளின் நன்மைகள் குறித்து நுகர்வோருக்கு எடுத்துரைக்கத்தேவையான விழிப்புணர்வு பதாகைகள் அந்த வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு வருகின்ற வியாபாரிகள் அனைவருக்கும் முறையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் மத்திய உணவுப் பாதுகாப்புத்துறைக்கு விண்ணப்பித்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக அண்ணா நகர் உழவர் சந்தைக்கு சிறந்த சந்தைக்கான விருது கிடைத்துள்ளது என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பட்டியலின ஊராட்சித்தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றமுடியாவிட்டால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உதவும்!