மதுரை: தென் மாவட்ட இளைஞர்களின் வேலை வாய்ப்பினைப் பெருக்குவதற்காக மதுரையில் ரூ.600 கோடி செலவில் டைடல் பார்க் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் மற்றும் வேளாண் விளைபொருள் வணிக வளாகத்திற்கும் இடையே அமைந்துள்ள மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் 10 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் அமைய உள்ளது.
இதனிடையே, இரண்டு கட்டங்களாக டைடல் பார்க் அமைக்கும் பணி நடைபெறும் என முதலமைச்சர் அறிவித்த நிலையில், மதுரை மாநகராட்சியில் முதல் கட்டமாக 5.6 ஏக்கர் பரப்பளவு நிலத்தை டைடல் நிறுவனத்திற்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் டைடல் பார்க் அமைப்பதற்கான வடிவமைப்பு, பொறியியல் மற்றும் திட்ட மேலாண்மைக்கான ஆலோசனை சேவைகள் வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி டைடல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதற்குப் பிறகு ஓராண்டு முடிவடைந்த பின்னரும்கூட எந்தவித முன்னேற்றமும் இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர் இளைஞர்கள்.
பெங்களூரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் கூறுகையில், 'தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு செய்யப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை எந்தப் பணியும் நடைபெறவில்லை. இதற்காக நாங்கள் ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தோம்.
அதில், நிலம் கையகப்படுத்துவதில் மதுரை மாநகராட்சி தாமதம் செய்வதால் கட்டுமானப் பணிகள் துவங்கவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. தென்மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் இளைஞர்கள் டைடல் பார்க் மூலமாக வேலை வாய்ப்பு பெறுவர் என முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
மதுரையைப் பொறுத்தவரை எல்காட்-வடபழஞ்சி, எல்காட்-இலந்தைக்குளம் என இரண்டு ஐடி பூங்காங்கள் இயங்கி வருகின்றன. சென்னைக்கு அடுத்தபடியாக முழு கொள்ளளவுடன் மேற்கண்ட இரண்டு ஐடி பார்க்குகளும் மதுரையில் இயங்கி வருகின்றன. இவை இரண்டிலும் ஏறக்குறைய 12 ஆயிரம் பேர் பணி செய்கின்றனர்.
இந்நிலையில் 3வதாக அமையக் கூடிய ஐடி பார்க் குறித்த முதலமைச்சரின் அறிவிப்பு எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த அறிவிப்பு எங்களுக்கு பெரும் நம்பிக்கையை ஊட்டியது. மிகவும் விரைந்து முடிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால், இந்தப் பணிகள் தாமதமாவது வேதனை அளிக்கிறது.
இதுகுறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடமும் கோரிக்கை வைத்திருந்தோம். அவர் ஐடி துறை அமைச்சராக இருந்தாலும், டைடல் பார்க் அத்துறையின் கீழ் வராது. தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டிட்கோவில் வருகிறது என்பதால், அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும் கோரிக்கை வைத்தோம். அவரும் இதனை விரைந்து முடிக்க ஆர்வம் காட்டினார்.
மேலும், பன்னாட்டு தொழில் முதலீட்டாளர் சந்திப்பு 2024ல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக மதுரை டைடல் பார்க் பணிகள் துவங்கப்பட வேண்டும். அப்போதுதான் ஐடிதுறையில் மிகப்பெரிய முதலீடு உள்ளே வர வாய்ப்பு ஏற்படும். இதனையொட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசுகூட மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் வரவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மதுரையில் போதுமான கட்டமைப்பு வசதியின்மையைக் காரணம் காட்டி நிறைய நிறுவனங்கள் வேறு சில பகுதிகளுக்குச் சென்றுவிடுகின்றனர். தென் மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் புலம் பெயர்ந்து பெங்களூரு, ஹைதராபாத், சென்னை போன்ற நகரங்களுக்குச் சென்று விடுகின்றனர்.
இதனைத் தடுத்து உள்ளூரில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அண்மையில் கூட தமிழக முதலமைச்சர் உள்ளடங்கிய வளர்ச்சி என்பது குறித்து பேசியுள்ளார். ஆகையால் முதலீடுகள் அனைத்தையும் பரவலாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார ரீதியிலும் தென் மாவட்டங்கள் வளம் பெறவும் முடியும். சுற்றுலா, வணிகம் மற்றும் ஐடி என முப்பரிமாணத்தில் மதுரை பொருளாதாரத்தில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்த நல்ல வாய்ப்பு என்கிறார்.
மேலும், அண்மையில் எவ்வளவு விரைவாக கலைஞர் நூலகத்தை மதுரையில் அமைத்தார்களோ, அதேபோன்ற வேகத்தை டைடல் பார்க் விஷயத்திலும் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் படித்த இளைஞர்கள் வேறு நகரங்களுக்கு புலம் பெயராமல் தடுக்க முடியும். அவர்களது சொந்த பகுதியிலேயே பணியாற்றுவதற்கான வாய்ப்புகளும் உருவாகும்' என்றார்.
மேலும், மதுரை மாவட்ட சிறு மற்றும் குறுதொழில்கள் சங்கத்தின் தலைவர் லட்சுமி நாராயணன் கூறுகையில், 'மதுரையில் ரூ.600 கோடி மதிப்பீட்டில் டைடல் பார்க் குறித்து கடந்தாண்டு தமிழக முதலமைச்சர் அறிவிப்பு செய்தார். கடந்த 2000ஆம் ஆண்டில்தான் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் ஐடி பார்க் குறித்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இலந்தைக்குளம் எல்காட் இன்று முழுமை பெற்று நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. அதேபோன்று வடபழஞ்சியிலும் தற்போது வேகமாக முழுமைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் அறிவிக்கப்பட்ட டைடல் பார்க் திட்டத்தால் 10 ஆயிரத்திற்கும் மேலான இளைஞர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுவார்கள்.
இது மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பொறியியல் கல்லூரியில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு வரப்பிரசாதம். ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக நான் அறிகிறேன். மதுரை மாநகராட்சி இந்தப் பணியை நிறைவு செய்துவிட்டால், மற்ற பணிகள் விரைவாக நடைபெறும் என நம்புகிறேன்.
வருகின்ற 2030ஆம் ஆண்டுக்குள் 'ஒன் டிரில்லியன் டாலர்' என்ற பொருளாதாரத் திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். இதனை அடைவதற்கு டைடல் பார்க் போன்ற திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் பிற தொழில் முனைவோருக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
பெரிய ஐடி நிறுவனங்கள் வரும்போது அவர்களைச் சார்ந்த பிற தொழில்களும் வளரும். மதுரை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற வேண்டுமெனில், டைடல் பார்க் வர வேண்டும் என்பது மிக முக்கியம். இதனை முதல்வர் கவனத்தில் கொண்டு மிக விரைவில் செய்ய வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க:முறப்பநாடு விஏஓ கொலை வழக்கு; இருவருக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!