மதுரை: திருவாரூர் மாவட்டத்தில் மத்தியப் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் சேர்வதற்காக மதுரை மாவட்டத்தைச்சேர்ந்த மாணவர் இருவர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை மாணவருக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து நுழைவுத்தேர்வு மையத்திற்கான அனுமதிச்சீட்டு இரண்டு நாள்களுக்கு முன்பு வந்துள்ளது. இது குறித்த கடிதம் ஒன்று மாணவரது வீடு தேடி வந்தது.
இதனை வாங்கிப் பிரித்துப் பார்த்த மாணவரின் தந்தைக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. மாணவருக்கான தேர்வு மையம் லட்சத்தீவில் இருந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவரும், அவரது தந்தையும், “எப்படி மாணவர் மையத்திற்கு போகமுடியும், கப்பலில் அல்லது விமானத்தில் செல்லவேண்டும் என்றால் கூட தேர்வுக்கு ஒரு வாரம் கூட அவகாசம் தரவில்லை.
விமானப்பயணத்திற்கு டிக்கெட் வாங்குவது என்றால் எவ்வளவு செலவாக வேண்டியிருக்கிறது. விமானத்திற்கு நாளுக்கு நாள் கட்டணம் ஏறிக்கொண்டே செல்கிறது. இதில் அனுமதிச்சீட்டோடு வந்துள்ள அறிவுரைச்சீட்டில், ஒரு நாள் முன்பாகவே வந்து மையத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று ஆலோசனை வேறு குறிப்பிடப்பட்டுள்ளது” என வேதனைத்தெரிவித்தனர்.
இது குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுப்பியுள்ள கேள்வியில், “மத்திய பல்கலைக்கழங்களில் சேர்வதற்கான CUTN நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. மதுரையைச்சேர்ந்த மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையம் ஒதுக்கினால் மாணவர் எப்படி செல்வார்? மாணவரின் தந்தை பதறிப் போனார்.
இவரைப் போல எத்தனை மாணவர்களோ, பெற்றோர்களோ. ஏழை, நடுத்தரக்குடும்பங்கள் என்ன செய்யும்? மன உளைச்சல், பணத்திற்கும் அலைச்சல். இதுபோன்ற மாணவர்களுக்கு மையத்தை மாற்றுங்கள் என்று உயர் கல்வி செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளேன். தேர்ச்சிப்பெறுவதை விட தேர்வு மையத்துக்குச் சென்று சேர்வது கடினம் என்ற நிலையை உருவாக்காதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு செய்தித்தாள் வடிவில் நண்பர்கள் வைத்த பேனர்