மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள கரும்பாலை வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் கஞ்சா விற்பனை, திருட்டு போன்ற சட்டவிரோத செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில், அதனைத் தடுக்கும் வகையில் அதேப் பகுதியைச் சேர்ந்த சந்துரு என்ற இளைஞர் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து குடியிருப்பு வளாகங்களைச் சுற்றி 14 இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளார்.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென அங்கு அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை பார்த்து ஆத்திரமடைந்து அதனை அமைத்த இளைஞர் சந்துருவை கடுமையாகத் தாக்கியதோடு, அப்பகுதி பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்களையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
மேலும் கட்டை, கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தெருக்களில் ஊர்வலமாக வந்து ஒவ்வொரு வீடாகச் சென்று கடுமையான வார்த்தைகளால் திட்டியதோடு ஆயுதங்களைக் கொண்டு மிரட்டியுள்ளனர்.
இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்குவைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்த நிலையில், இதற்கு மூளையாக செயல்பட்ட நபர் மட்டும் தப்பியோடியுள்ளார். காவல் துறையினர் அந்த நபரை வலைவீசி தேடிவருகின்றனர்.