மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், மதுரை எம்.பி. வெங்கடேசன் இன்று ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனை முதல்வர் வனிதா தலைமையில் பல்துறை சார்ந்த மருத்துவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டார். பின்பு, மருத்துவமனையின் தேவைகள், கட்டமைப்பு மேம்பாடுகள் போன்றவை குறித்து மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகிகளிடம் தகவல் கேட்டறிந்தார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தென்மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய மருத்துவ சேவையை வழங்கிவருகிறது. இதன் அடிப்படை தேவைகள், கட்டமைப்பு மேம்பாடுகள் ஆகியவற்றை சிறப்புடன் மேற்கொள்வதற்காக இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
மதுரையில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு அரசு மருத்துவமனையை மேம்படுத்த உள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையை மேம்படுத்துவது எங்களது குறிக்கோள்’ என்றார்.