மதுரை: வந்தே பாரத் ரயில் அறிமுகத்தை அடுத்து அக்டோபர் 1ஆம் தேதி முதல் மதுரையிலிருந்து புறப்படும் சில முக்கிய ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்து மதுரை ரயில்வே கோட்டம் புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட நெல்லை-சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயிலின் பயண நேரத்திற்காக, பல்வேறு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் மதுரையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் சில முக்கிய ரயில்களின் பயண நேரத்தை மாற்றி தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டம் அட்டவணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாள்தோறும் மதுரையில் இருந்து காலை 7.10 மணிக்குப் புறப்படும் வைகை விரைவு ரயில் (12636) காலை 6.40 மணிக்கும், மதுரையிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் விரைவு ரயில் (16722) இதுவரை காலை 7.25 மணிக்குப் புறப்பட்டுச் சென்ற நிலையில் இனி காலை 7 மணிக்கும் புறப்படும். மேற்கண்ட இரண்டு ரயில்களும் வந்தே பாரத்துக்காக நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மதுராவில் ரயில் விபத்து; 5 ரயில்வே ஊழியர்கள் சஸ்பெண்ட்
மதுரை-சென்னை எழும்பூர் செல்லும் 'பாண்டியன் எக்ஸ்பிரஸ்' மதுரையிலிருந்து இரவு 9.35 மணியளவில் புறப்பட்டுச் சென்ற நிலையில், இனி 15 நிமிடம் முன்பாக, அதாவது இரவு 9.20க்குப் புறப்பட்டுச் செல்லும். சென்னை-கொல்லம் அதிவிரைவு ரயிலுக்காகப் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செங்கோட்டை-சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் (12662) இரவு 9.35 மணிக்கு மதுரை வந்து பிறகு இரவு 9.55 மணிக்குச் சென்னைப் புறப்பட்டுச் சென்ற நிலையில், புதிய அட்டவணையின் படி இனி இரவு 9.45 மணிக்கு, அதாவது 10 நிமிடம் முன்பாகவே சென்னைப் புறப்பட்டுச் செல்லும். அதேபோன்று மறு மார்க்கமாகச் சென்னை-செங்கோட்டைப் பொதிகை எக்ஸ்பிரஸ் (12661) அதிகாலை 4.25 மணிக்கு மதுரை வந்து காலை 4.45 மணிக்குப் புறப்பட்டுச் சென்ற நிலையில், இனி 15 நிமிடம் முன்பாக 4.30 மணிக்கே புறப்பட்டுச் செல்லும். மேற்கண்ட இரண்டு ரயில்களிலும் வழித்தட மாற்றம் மற்றும் புனரமைப்புப் பணிகள் காரணமாக நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை-மதுரை வைகை அதிவிரைவு வண்டி (12635) இரவு 9.15 மணிக்கு மதுரை வந்தடைந்த நிலையில், இனி 15 நிமிடம் தாமதமாக இரவு 9.30 மணிக்கு வந்து சேரும். வந்தே பாரத் சென்னை-நெல்லை ரயிலின் நேரத்திற்காக இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை-விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரயில் (16868) அதிகாலை 4.05 மணிக்குப் புறப்பட்ட நிலையில், இனி அரை மணி நேரம் முன்னதாக 3.35 மணிக்குப் புறப்படும் என மதுரை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: Southern Railway Special Train: தென்னக ரயில்வேயின் சிறப்பு ரயில்கள்.. இது பண்டிகை ஸ்பெஷல்..!