மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ரயில் போக்குவரத்தாகத் திகழும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (ஆகஸ்ட் 15ஆம் தேதி) தனது 46வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. அந்த வகையில், ரயில் ஆர்வலர்கள் மதுரை ரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் முன்பாக கேக் வெட்டி, ரயிலின் பிறந்த நாளை கொண்டாடினர்.
மதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேர அதிவிரைவு ரயிலான வைகை எக்ஸ்பிரஸ், கடந்த 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் தென்மாவட்ட வணிகர்களும், பொதுமக்களும் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். மேலும் இந்த ரயிலின் பயணக் கட்டணம், பிற ரயில்களோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவு ஆகும்.
மேலும், மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் ரயில், பிற்பகல் 2.30 மணிக்கு, அதாவது 7.20 மணி நேரத்தில் சென்னை சென்றடையும். அதேபோன்று சென்னையிலிருந்து (12635) பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு, அதாவது 7.25 மணி நேரத்தில் மதுரை சென்றடையும். இரு மார்க்கமும் பகல் நேர ரயில் என்பதால், தென்மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு 7.50 மணி நேரமாக இருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம், படிப்படியாகக் கடந்த பத்தாண்டுகளில் 35 நிமிடம் வரை குறைக்கப்பட்டு உள்ளது. இதே காலகட்டத்தில், தொடக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட பயண நேரத்திலேயே பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் சென்னை - மதுரை மின்மயமாக்கம் காரணமாக 10 நிமிடங்கள் பயண நேரம் குறைக்கப்பட்டன. 2018ஆம் ஆண்டு மதுரை - சென்னை மார்க்கத்தில் 5 நிமிடங்கள் குறைக்கப்பட்டன. 2019ஆம் ஆண்டு மேலும் 5 நிமிடங்கள் குறைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு முதன் முதலாக வைகை எக்ஸ்பிரசில் தரமான, அதே நேரம் எடை குறைந்த எல்.ஹெச்.பி. பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் காரணமாக 2022ஆம் ஆண்டு மேலும் பயண நேரத்தில் 10 நிமிடங்கள் குறைக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையிலிருந்து புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரத்தில், மேலும் 5 நிமிடங்களைக் குறைத்து, காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு சென்னைக்கு பிற்பகல் 2.30 மணிக்குப் பதில் 5 நிமிடம் முன்னதாக 2.25 மணிக்கு சென்றடைந்தது.
இந்த வேகம் தற்போது இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் பல்வேறு சதாப்தி ரயில்களுக்கு இணையான வேகமாகும். மைசூர் - சென்னை ரயில் (12008) 7 மணி 15 நிமிடங்களில் 500 கிலோ மீட்டர்களை வெறும் 2 நிறுத்தத்தில் கடக்கிறது. ஆனால் வைகை எக்ஸ்பிரஸ் அதே 7.15 மணி நேரங்களில் 497 கி.மீட்டர்களை 11 நிறுத்தங்களோடு கடக்கிறது.
இதுகுறித்து ரயில் ஆர்வலர்கள் கூறுகையில், "தெற்கு ரயில்வேயின் செயல்திறன் மேம்பாட்டிற்கான சான்று இதுவேயாகும். வைகை எக்ஸ்பிரசின் அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிகரிக்காமல், இந்த சாதனை நிகழ்த்தப்படுகிறது. இதற்குக் காரணம் திறமையாகக் கையாளும் தெற்கு ரயில்வே அனைத்து மட்ட ஊழியர்களின் ஒருங்கிணைந்த செயல்பாடு தான்.
இது போன்ற சாதனைகளின் விளைவாக அடுத்த சில ஆண்டுகளுக்குள் வைகை எக்ஸ்பிரஸ் வெறும் 7 மணி நேரத்திற்குள் மதுரை - சென்னை மற்றும் சென்னை - மதுரை பயண நேரம் சாத்தியப்பட்டாலும் வியப்பதற்கில்லை" என்றனர்.
இந்நிலையில் வைகை எக்ஸ்பிரஸ் 46வது பிறந்தநாள் விழா மதுரை ரயில் நிலைய சந்திப்பின் இரண்டாவது நடைமேடையில் அதிகாலை 6 மணி அளவில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் முன்பாக ரயில் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். மேலும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணிபுரிந்த மற்றும் பணி புரிகின்ற தொழில்நுட்ப பணியாளர்கள், ரயில்வே ஊழியர்கள் என அனைவரும் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: "மாநிலப் பட்டியலில் கல்வி” - சுதந்திர தின விழாவில் நீட் தேர்வுக்காக முழங்கிய ஸ்டாலின்!