மதுரை: பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட 25 பேர் மீது உரிய அனுமதியின்றி பேனர் வைத்ததாக மதுரை மாநகர காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மதுரை அழகர்கோவில் சாலையிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாஜகவின் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று (மே 10) நடைபெற்றது.
இதற்காக அழகர்கோயில் சாலை, தல்லாகுளம் அவுட்போஸ்ட், மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட பகுதிகளில் உரிய அனுமதி இல்லாமல் பாஜகவினரால் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது மாநகராட்சி நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் மாநகராட்சி ஊழியர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றினர்.
அப்போது அங்கிருந்த பாஜகவினர், பேனர்களை அகற்றிய மாநகராட்சி ஊழியர்களை தாக்கியதோடு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் உரிய அனுமதியின்றி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைத்ததாக பாஜக மதுரை மாவட்டத் தலைவர் சரவணன் உள்ளிட்ட 25 பேர் மீது தல்லாகுளம் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: தப்பியோடிய ராஜபக்ச குடும்பம்... பட்டாசு வெடித்த கோயம்புத்தூர்வாசிகள்...