மதுரையில் காவல் துறையினர் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி இறந்த விவேகானந்தரின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் உடற்கூறாய்வு நடைபெற்றது. இதனையடுத்து உயிரிழந்த இளைஞர் தரப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, மதுரையில் காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்த இளைஞர் விவேகானந்தகுமார் மீது தாக்குதல் நடத்திய ஆறு காவல் துறையினரின் பெயரை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது. எனவே, தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை விடுத்துள்ளோம். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடர்ந்து நாளையும் நீடிக்கும் என்று எச்சரித்தார்.
மேலும் பேசிய அவர், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கை நிறைவேற்றினால் மட்டுமே உயிரிழந்தவரின் உடலை பெறுவோம் அதுவரை போராட்டம் தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காவல் துறையினர் தாக்கி விவேகானந்தகுமார் உயிரிழந்த துக்கம் தாளாத அவரது மனைவி கஜப்பிரியா தனது வீட்டில் தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்ட கஜப்பிரியா மதுரை இராசாசி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.