மதுரை : கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "உள்ளாட்சிப் பதவிகள் கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி முதல் காலியாக உள்ளன. ஆனால் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த விரும்பவில்லை.
தேர்தல் நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்களுக்கு தவறான தகவல்களை வழங்கி வருகிறது. தேர்தலை நடத்துவதற்கான நோக்கமே இல்லை. வார்டுகளை ஒதுக்கும் வரையறையும் 2017ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதியே அப்போதே கொணரப்பட்டது.
இதுவும் தேர்தலை தள்ளிப்போடுவதற்கான நோக்கமாகவே தெரிகிறது. நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் டிசம்பர் 9ஆம் தேதி மாவட்ட பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை மாநகராட்சி, நகராட்சிகளே. பொது சுகாதாரம், தண்ணீர்,சாலை, கட்டிட பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும்.
ஆகவே, மாநகராட்சி, நகராட்சி பொறுப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும்" என கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில், தமிழ்நாடு அரசு, தேர்தல் ஆணையம் தரப்பில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தல் தொடர்பான பதில் மனுவை தாக்கல் செய்ய இரண்டு வார கால அவகாசம் கோரப்பட்டது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.