மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சொக்கநாதன்பட்டி தெற்குத் தெருவில் முத்துக்கருப்பன்- பாப்பா(75) தம்பதியினர் வசித்துவருகின்றனர். இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். முத்துக்கருப்பன் பெயரில் 2.50 ஏக்கர் நிலம், பாப்பம்மாள் பெயரில் 30 சென்ட் நிலம் உட்பட 2.80 ஏக்கர் நிலம் சொக்கநாதன்பட்டியில் உள்ளது. இந்த நிலத்தை பங்கிட்டு கொடுக்குமாறு முத்துக்கருப்பனின் மகன்களான பொன்ராம், கண்ணன் ஆகியோர் கேட்டுள்ளனர்.
அதற்கு உடன்பட மறுத்த பாப்பா(78), இந்த நிலம் தன் தந்தை வழியில் வந்த நிலம் என்றும் பெண்பிள்ளைகள் மூன்றுபேருக்கும் இந்தச் சொத்தை சமமாக பங்கிட்டு கொடுக்க ஒத்துழைத்தால் மட்டுமே நிலத்தை எழுதிக்கொடுப்பேன் எனவும் கூறியுள்ளார். இந்த சொத்து பிரச்னை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரித்த காவல் துறையினர், பாப்பம்மாள் உயிரிழந்தபிறகு சொத்தை பிரித்துக்கொள்ளுங்கள் என சமாதானம் பேசி அனுப்பிவைத்துள்ளனர்.
இருப்பினும், மனதளவில் சமாதானம் அடையாத பொன்ராம், கண்ணன் ஆகிய இருவரும் திங்கட்கிழமை தாய் வீட்டிற்குச் சென்று நிலத்தை எழுதித் தருமாறு கேட்டு தகராறு செய்துள்ளனர். இந்த தகராறை தடுக்க முயன்ற முத்துக்கருப்பனை வெளியே தள்ளிவிட்டு வீட்டில் இருந்த அரிவாள், கத்தியை எடுத்து மூதாட்டி பாப்பாவை பொன்ராம், கண்ணன், அவர்களது மகன்கள் சேர்ந்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், பாப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலை சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த காவல் துறையினர், குற்றவாளிகளான கண்ணன், பொன்ராமின் மகன்களான கணேஷ்குமார், ரகுராம் ஆகிய மூவரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய பொன்ராம், சிவனை காவல் துறையினர் தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும் திருமங்கலம் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: செய்தியாளர் கொலை வழக்கு: 'எங்களைப் பற்றி செய்தி சேகரித்ததால் வெட்டிக் கொன்றோம்'