மதுரை: விமான நிலையத்தில் 24 மணி நேரமும் விமான சேவையை தொடங்க விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இதுவரை பகலில் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், இனி வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இரவிலும் விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மடீட்சியா போன்ற அமைப்புகளும் பல்வேறு அரசியல் தலைவர்களும் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். இந்நிலையில் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு மதுரை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மதுரை மட்டுமல்லாமல் அகர்தலா, இம்பால், போபால், சூரத் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கும் ஏப்ரல் 1 முதல் 24 மணி நேர சேவைகள் தொடங்க உள்ளன. இந்தியாவின் 34 விமான நிலையங்களில் தூய்மையான விமான நிலையங்களில் முதலிடத்தையும், அதேபோல பயணிகளின் சேவைத்தர மதிப்பீட்டில் இந்திய விமான நிலையங்களில் 4-வது இடத்தையும் மதுரை விமான நிலையம் பெற்றுள்ளது.
தற்போது விமான நிலையம் விரிவாக்கப் பணிகளுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வரும் நிலையில் அப்பணிகள் முழுமையாக நிறைவேறினால் மதுரை விமான நிலையம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பாரம்பரிய முறையில் நடந்த பொங்கல் நிகழ்ச்சி - ஏராளமான மாணவிகள் பங்கேற்பு