மதுரை: மத்திய அரசு அண்மையில் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களைத் தேர்வு செய்துள்ளது. அதில் ஒருவர்தான் உடற்கல்வி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார். இவர் ஜல்லிக்கட்டுக்குப் பெயர் பெற்ற உலகப்புகழ் அலங்காநல்லூரில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி மற்றும் என்.சி.சி அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.
தனது மாணவர்களை விளையாட்டிலும், என்.சி.சி-யிலும் தயார்ப்படுத்தி அவர்களை வெற்றி பெறச் செய்வதில் முன்மாதிரியான ஆசிரியராகத் திகழும் இவரை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் சார்பில் சந்தித்து உரையாடினோம். அப்போது முனைவர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் பேசுகையில், “மத்திய அரசு வழங்கியுள்ள இந்த தேசிய நல்லாசிரியர் விருது எனக்கு பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக இந்தப் பள்ளியில் நான் பயின்று வருகிறேன். எங்களது பள்ளி மாணவர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருதைப் பெற்றேன். மதுரை மாவட்ட ஆட்சியர் மூன்று முறை எனது பணியைப் பாராட்டி சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் கௌரவப்படுத்தி உள்ளார்.
மேலும் எனது மாணவர்கள் குத்துச்சண்டை, நீச்சல், டேக்வாண்டோ, ஸ்குவாஷ், சிலம்பம் போன்ற போட்டிகளில் மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோன்று, இந்த ஆண்டும் குத்துச்சண்டை, கூடைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இரண்டு முறை கின்னஸ் உலக சாதனையும் செய்துள்ளனர்.
எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் என்.சி.சி-யில் மட்டுமன்றி, அவர்களுக்குப் பிடித்த எந்த விளையாட்டிலும் கலந்து கொள்ளலாம். இதற்காக மாணவர்களை நாங்கள் வற்புறுத்துவது இல்லை. அவர்களின் விருப்பத்திற்கு மட்டுமே முன்னுரிமை. எங்கள் பள்ளியில் கடந்த 1967ஆம் ஆண்டிலிருந்து என்.சி.சி உள்ளது. நான் அதன் 4வது என்.சி.சி அலுவலர். எங்கள் மாணவர்கள் பெரும்பாலானோர் காவல்துறை மற்றும் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். என்னைப் போலவே உடற்கல்வி ஆசிரியராகவும் சிலர் உள்ளனர்.
இந்தப் பள்ளியால் நான் பெருமை அடைந்தேன். என்னால் இப்பள்ளியும் பெருமையடைந்தது என்பதை இந்த நேரத்தில் சொல்வது சரியாக இருக்கும் என எண்ணுகிறேன். உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றும் அனைத்து ஆசிரியப் பெருமக்களும் நல்லாசிரியர் விருதைப் பெற வேண்டும் என்பது எனது விருப்பம். வெற்றி என்பது அத்தனை சாதாரணமாக யாருக்கும் கிடைத்துவிடாது. வரலாற்றைப் புரட்டினால் தெரியும்.
நிறைய அவமானங்கள், உதாசீனங்கள் என இவற்றையெல்லாம் கடந்து வர வேண்டும். கிண்டல், கேலி செய்வார்கள். அதற்கெல்லாம் நாம் சோர்ந்துவிடக்கூடாது. அச்சோர்வுகளால் சிலர் தற்கொலைகூட செய்துகொண்டு விடுகிறார்கள். அதையெல்லாம் நாம் செய்யக்கூடாது. நம்முடைய மனதை வலிமையாக்கிக் கொள்ள வேண்டும். நமது குறிக்கோள் என்ன? எதற்காக இந்த உலகில் பிறந்துள்ளோம்? என்ன செய்யப்போகிறோம்? அதை அடைவதற்கு என்னென்ன வழிகள் உள்ளன என்பதைக் கண்டறிய வேண்டும்.
நமது வீட்டிற்குச் செல்லும் வழியில் தடை இருக்கிறதென்றால் 10 கி.மீ. சுற்றிக் கொண்டாவது நாம் வீடு சென்று சேர்வதில்லையா..? அது போலத்தான் வாழ்க்கையும். சகிப்புத்தன்மையும், பொறுமையும் தான் அவசியம். அதுபோல ஒரு இலக்கை அடைவதற்கு, நிறையத் தடைகளைத் தாண்டிச் செல்லக் கற்றுக் கொள்ள வேண்டும். வெற்றியை நோக்கி பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு செய்தோம் என்றால் ஒருநாள் நாம் நினைத்ததை அடைய முடியும்.
தடம் பார்த்து நடப்பவர்கள் சாதாரண மனிதர்கள். தடம் பதித்து நடப்பவர்களே மாமனிதர்கள். இந்த உலகத்தில் சாதாரண மனிதராக வாழ ஆசைப்படுகிறீர்களா?.. அல்லது தடம் பதிக்கும் மனிதராக வாழ ஆசைப்படுகிறீர்களா?. என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் தடம் பதிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனைக் கடந்த 25 ஆண்டுகளாகச் செய்து கொண்டே இருக்கிறேன்.
உலகப்புகழ் பெற்ற இந்த அலங்காநல்லூரில் கின்னஸ் சாதனைகள் படைத்த எங்கள் பள்ளியில், மற்றொரு மகுடமாக எனக்குக் கிடைத்த தேசிய நல்லாசிரியர் விருதை எனது பள்ளிக்கும், முன்னாள் மாணவர்களுக்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும், ஊர் மக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். அதுமட்டுமன்றி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், இயக்குநர்களுக்கும் இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன்.
இதற்கு உறுதுணையாக இருந்த என்னுடைய தாய், தந்தையர், மனைவி, மகன்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு உள்ளேன். விருது கிடைத்த செய்தி அறிந்தவுடன் எல்லோரும் என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். மிக மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் இந்த உலகத்தில் தடம் பதித்து வாழ விரும்புகிறேன்” என்றார்.
தொடர்ந்து பள்ளியின் தலைமையாசிரியர் கல்யாண முத்தையா பேசுகையில், “உடற்கல்வி ஆசிரியர் காட்வினுக்குக் கிடைத்த தேசிய நல்லாசிரியர் விருது எங்கள் பள்ளிக்குப் பெருமை. தமிழக அரசின் நல்லாசிரியர் விருதை முன்னரே பெற்றவர் இவர். பள்ளி மாணவர்களை உடற்கல்வித்துறையில் ஊக்கப்படுத்தி மாநில, தேசிய அளவில் பங்கேற்க வைத்து, பல்வேறு விருதுகளை மாணவர்கள் வெல்வதற்குத் துணை நின்றவர்.
அதுமட்டுமல்ல, வித்தியாசமான பல்வேறு விளையாட்டுகளை தன்னுடைய சொந்த முயற்சியில் மாணவர்களுக்குக் கற்றுத் தருவதில் மிகுந்த ஆர்வம் காட்டக்கூடியவர். அதேபோன்று என்.சி.சி-யிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தி பங்கேற்கச் செய்கிறார். அவரிடம் பயின்ற நிறைய மாணவர்கள் தற்போது பல்வேறு அரசுப் பணிகளில் அமர்ந்துள்ளனர். பள்ளியையும், மாணவர்களையும் உயர்த்தியதோடு தன்னையும் உயர்த்திக் கொண்டதால் தான் இன்று நல்லாசிரியராய் மிளிர்கிறார்.
இது எங்கள் பள்ளிக்கு மட்டுமன்றி, இந்தப் பகுதிக்கும் பெருமையாகும். பள்ளியின் சார்பாக அவரை வாழ்த்துகிறோம். பாராட்டுகிறோம்” என்றார். அதேபோல், பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் தினேஷ் கூறுகையில், “ஸ்குவாஷ் என்றால் என்னவென்றே தெரியாத எனக்கு அந்த விளையாட்டை அறிமுகப்படுத்தி, உற்சாகமூட்டி வருகிறார்.
எங்கெல்லாம் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றதோ, அங்கெல்லாம் என்னை அழைத்துச் சென்று தொடர்ந்து ஊக்கமளிப்பவர். அவருக்கு தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்தது பெருமையாக உள்ளது. அவரைப் போன்று நானும் வர வேண்டும் என்ற ஊக்கம் எனக்கு ஏற்பட்டுள்ளது” என்றார். மேலும், மற்றொரு மாணவர் விஷ்வா கூறுகையில், “என்.சி.சி-யில் என்னைச் சேர்த்து எனக்கு ஊக்கமளித்து வருகிறார். அவர் பெற்ற விருது எங்களுக்குப் பெருமையாக உள்ளது” என்றார்.
மாணவர்களின் நலனே தேசத்தின் நலன் என்பதை தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டு இயங்கி வரும் காட்வின் போன்ற நல்லாசிரியர்களே, இன்றைய சமூகத்தின் தேவை. அவர்களால் இயங்குகின்ற சமூகம் தான், நாளைய தலைமுறையை நல்ல வண்ணம் உருவாக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
இதையும் படிங்க: அழகான கடிதம் எழுதுவது எப்படி? - உலக கடிதம் எழுதும் நாள் சிறப்பு தொகுப்பு!