மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களின் கல்லூரிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கடந்த நவம்பர் மாதம் பருவத் தேர்வை எழுதினர்கள். இந்த தேர்வுகளின் விடைத்தாள்கள் பல்கலைக்கழகத்துக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களின் விடைத்தாள்கள் மட்டும் பல்கலைக்கழகத்தில் காணாமல் போனது.
இந்நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மு.கிருஷ்ணன் அவர்கள் மாயமான விடைத்தாள்களை தேட உத்தரவிட்டதைத் தொடர்ந்து, விடைத்தாள்கள் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 5 சிண்டிகேட் உறுப்பினர்கள் அடங்கிய விசாரணைக்குழு தீவிர விசாரணை நடத்தியது. விசாரணை முடிவடைந்த நிலையில் முதற்கட்டமாக துணைப்பதிவாளர் அன்புச்செழியன், உதவிப்பதிவாளர் உதயசூரியன், கண்காணிப்பாளர் ரவீந்திரன், உதவியாளர்கள் ஜெயராஜ், வேலுச்சாமி உள்ளிட்ட 6 பேர் புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனர்.
விடைத்தாள்கள் மாயமான சம்பவத்தில் தொடர்புடைய தேர்வுத்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் மேலும் 6 பேர் வியாழக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இருவருக்கு மெமோ வழங்கப்பட்டதாகவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் அடுத்த வாரம் தொடங்கஉள்ள ஆட்சிக்குழு கூட்டத்தில் சம்பவம் தொடர்பாக விவாதிக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க:நள்ளிரவில் வெளியாகும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள்