மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா மேலப்பட்டியைச் சேரந்த பத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பனை சார்ந்த தொழிலை நடத்தி வருகின்றனர். இவர்கள், கோடை காலங்களில் மதுரையின் முக்கிய இடங்களில், சாலையோரக் கடைகள் அமைத்து நுங்கு, பதநீர் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வாழ்வாதாரத்தை நடத்திவந்தனர்.
கட்ராம்பட்டி பகுதியில் நான்கு மாதங்கள் தங்கி தொழிலை மேற்கொள்ளும் இவர்கள் கடந்த 2 மாதங்களாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். பதநீரிலிருந்து காய்ச்சும் பனங்கருப்பட்டியை விற்பனை செய்வதற்கும் போதிய போக்குவரத்து இல்லாததால் கடும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய பனைத் தொழிலாளி ஏமராஜா, " மூன்று தலைமுறைகளாக இந்தத் தொழில் செய்து வருகிறோம். இந்த வருடம் கரோனா நோய்த் தொற்று காரணமாக பதநீர் இறக்க ஒரு மாதம் காலதாமதமாகவே அனுமதி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஒரு வார காலமாக கோடை மழை பெய்து வருவதால் பதநீர் அளவும் குறைந்துள்ளது. இதனால் பனைமரம் ஏறும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எங்களின் வாழ்வாதாரம் காக்கப்பட அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோடையில் வாடிய பனை வியாபாரிகள்...