உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 8 - ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேக விழா கோயிலில் அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு மங்கள வாத்தியங்கள் முழங்கிட சிறப்பு மஜைகள் நடத்தப்பட்டு நீரீடம் சாற்றி, செங்கோல் வழங்கப்பட்டது.
விழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சிகளான மீனாட்சி சுந்தரர் திருக்கல்யாண வைபவம் 17ஆம் தேதியும், மாசி வீதிகளில் திருத்தேரோட்டம் வரும் 18ம் தேதியும் நடைபெறுகிறது.
இந்நிலையில் மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் விழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா வரும் 19ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.