உலக பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களை மகிழ்விக்கும் வகையில் தமிழ் நாட்டில் முதன்முறையாக இலவச லட்டு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, 'நாள்தோறும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு இலவசமாக 30 கிராம் எடையுள்ள லட்டு வழங்கப்பட உள்ளது. மீனாட்சியம்மன் கோயில் நிதியிலிருந்து லட்டு வழங்கும் திட்டத்திற்கு நான்கு விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
’இந்த லட்டானது, கடலை மாவு, கற்கண்டு, முந்திரி, ஏலக்காய், சாதிக்காய் பொடி, நெய் ஆகியவற்றைப் பயன்படுத்தி முற்றிலுமாக சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளதாகவும், இலவச லட்டு பிரசாதமானது அம்மன் சன்னதியின் இரண்டாம் பிரகாரம் பகுதியில் சாமி தரிசனம் முடித்து வெளியே செல்லும் போது கூடல் குமரர் சன்னதி முன்பாக, வரிசையாக நின்று பெற்று செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ எனவும் கூறினார்.
மேலும், ’லட்டு தயாரிக்கப் பயன்படும் அனைத்து உணவு பொருட்களையும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனையிட்டு அறிவுரை வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்' அவர் தெரிவித்தார்.
மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில், தக்கார் கருமுத்து கண்ணன், மாவட்ட ஆட்சியர் வினய், கோயில் இணை ஆணையர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பக்தர்களுக்கு லட்டு பிரசாதங்களை வழங்கினார்.
இதையும் படிங்க: ஹெல்மெட் அணியுங்கள்! லட்டை சுவையுங்கள்!