மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஓதுவாராக பணியாற்றி வந்தவர் சோமசுந்தரம் (30). இவர் ராமசாமி கோனார் தெருவில் உள்ள வடக்கு மீனாட்சி அம்மன் கோயில் குடியிருப்பில் தங்கி பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக சோமசுந்தரம் பணிக்கு வராததால், அவருடன் பணியாற்றும் நபர், சந்தேகமடைந்து குடியிருப்பில் அவர் தங்கியுள்ள அறைக்கு வந்து பார்த்தபோது கதவு மூடியிருந்தது.

அதனை தொடர்ந்து, கதவின் பூட்டை உடைத்து திறந்து பார்த்தபோது உடல் அழுகிய நிலையில், சோமசுந்தரம் இறந்து கிடந்தார். உடனடியாக மதுரை திலகர் திடல் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சோமசுந்தரத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், சோமசுந்தரம் விஷமருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.