மதுரை: கரோனா 2ஆவது அலை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் சுமார் இரண்டு மாதத்திற்கு பின் இன்று வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அறநிலையத்துறை பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
மீனாட்சி அம்மன் கோவிலில் காலை 6 மணி முதலே சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தரிசனம் செய்துவிட்டு திருக்கோயிலில் எந்த ஒரு இடத்திலும் உட்கார அனுமதி கிடையாது. கோயிலுக்குள் தேங்காய் , பழம், கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது.
அர்ச்சனை செய்வதற்கு அனுமதி இல்லை. திருக்கோயிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் வழக்கம்போல் நிர்வாகத்தின் மூலம் இலவச லட்டு, பிரசாதமாக வழங்கப்படுகிறது.
10 வயதிற்கு குறைவானவர்கள் , 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கோயில் திறக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் கரோனா தொற்று நீங்கி மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டிக் கொள்வதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்