தமிழ்நாடு எல்.பி.ஜி. சிலிண்டர் விநியோக சங்கத்தின் சார்பாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமார் 200க்கும் மேற்பட்டோர் மதுரை - அழகர்கோவில் சாலையில் பேரணியாகச் சென்று, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அலுவலர்களிடம் மனு அளிப்பதற்காக சென்றனர்.
தொடர்ந்து இதுகுறித்து தமிழ்நாடு எல்.பி.ஜி. சிலிண்டர் விநியோக ஊழியர்கள் தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவர் கணேஷ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், ' சிலிண்டர் விநியோகம் செய்யும் நாங்கள் நாளொன்றுக்கு, சுமார் ஒரு டன் முதல் மூன்று டன் வரை சிலிண்டர்களை சுமந்து விநியோகம் செய்து வருகிறோம். எங்களுக்கு வார விடுமுறையே கிடையாது. ஆண்டு முழுவதும் விடுமுறை இல்லாமல் வேலை பார்க்கும் எங்களுக்குச் சம்பளம் கிடையாது.
எல்.பி.ஜி. வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்தை வைத்துதான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் வேலை பார்க்கும் கிளை நிறுவனங்களில் ஊதியம் கேட்டால், வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்தை வைத்துக் கொண்டு வேலை பார்க்கவும் என்றும் கூறிவருகின்றனர். எனவே, மத்திய மாநில அரசுகள் உடனடியாக, எங்களது பிரதான பிரச்னையை கவனத்தில் கொண்டு, எங்களுக்கு முறையான ஊதியம் பெற வழிவகை செய்ய வேண்டும்.
எங்களது கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் சென்னையில் உள்ள முக்கிய அலுவலகங்களை முற்றுகையிட உள்ளோம். அதேபோல் முக்கிய எண்ணெய் நிறுவனங்களான பாரத், இந்தியன், எச்.பி. எண்ணெய் நிறுவனங்கள் முறையான நடவடிக்கை எடுத்து எங்களுடைய பிரச்னையை சரி செய்ய முன்வரவில்லை என்றால், அவர்கள் மீதும் வழக்குத் தொடுக்கத் தயாராக உள்ளோம்.
பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள உயர் அலுவலர்களிடம் இதுகுறித்து மனு அளிக்க நேற்று காலையில் பேரணியாக வந்த பொழுது, எண்ணெய் நிறுவன அலுவலர்கள் வராததால், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக திருச்சி மாநகராட்சியில் ஏப்ரல் மாதம் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளோம்” எனத் தெரிவித்துக்கொண்டார்.
இதையும் படிங்க: உரிமைகளைக் கேட்டு நடைபயணம் மேற்கொண்ட பழங்குடியினர் கைது